குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) – கவனிக்க வேண்டியவை.
உயர் ரத்த அழுத்தம் போலவே, குறைந்த ரத்த அழுத்தமும் (Low Blood Pressure) அலட்சியப்படுத்தக் கூடாத உடல்நலப் பிரச்னையாகும். குறிப்பாக முதியவர்களுக்கு வயது காரணமாக இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள், சில நோய்கள் அல்லது மருந்துகளின் தாக்கம் காரணமாக Low BP ஏற்படலாம்.
Low BP இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
சில மருந்துகள் அல்லது மாத்திரைகளின் பக்கவிளைவாக ரத்த அழுத்தம் குறையக்கூடும். எனவே, மருந்து காரணமாக Low BP ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். மருத்துவரின் அறிவுரையின்றி எந்த மருந்தின் அளவையும் குறைக்கவோ, நிறுத்தவோ கூடாது.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலையில், Low BP உள்ளவர்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் சிறிதளவு கூடுதல் உப்பு சேர்க்க பரிந்துரைக்கப்படலாம்.
நீண்ட நேரம் படுக்கையில் இருப்பவர்களுக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதனால், கை, கால்களை அடிக்கடி அசைப்பது, லேசான உடற்பயிற்சி செய்வது மற்றும் தேவையெனில் பிசியோதெரபி பெறுவது நல்லது.
படுக்கையிலிருந்து திடீரென எழுந்து நிற்பதைத் தவிர்க்க வேண்டும். முதலில் மெதுவாக உட்கார்ந்து, சில நிமிடங்கள் கழித்து எழுந்து நிற்பது பாதுகாப்பானது.
உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் Low BP ஏற்படலாம். எனவே, போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து அவசரநிலை ஏற்பட்டால், மருத்துவமனையில் குளுக்கோஸ் அல்லது சலைன் போன்ற திரவங்களை நரம்பு வழியாக செலுத்தி சிகிச்சை அளிக்கப்படலாம்.
0
Leave a Reply